புதன், 26 ஜனவரி, 2011

ஈழப் பிரச்சினையில் திருமாவளவனை குறை சொல்லலாமா?

ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ஈழப்பிரச்சினையில் திருமாவளவன் என்ன சொல்கிறார் என்றுதான் கூர்ந்து கவனித்தோம். அவரும் மேடைதோறும் கர்ஜித்தார். நான் கூட கண்கலங்கி கேட்டதுண்டு. பின்னர் திடீர் என்று கலைஞர் , காங்கிரஸ் வோடு சேர்ந்து கொண்டு மௌனம் சாதித்தார். எல்லோரும் இவரை ஈழப்பிரச்சினையில் ஒரு போராட்ட சக்தியாக , நம்பகத்தன்மை உடையவராக பார்ப்பதை நிறுத்தி கொண்டார்கள். நானும் தான்.

என் தலித் நண்பர்களில் சிலர் உணர்ச்சியற்று இருக்கிறார்கள்  என்று நானும் கொவப்பட்டதுண்டு. அதைப்போல திருமாவளவனே காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து கொண்டு தமிழனை காலைவாரிவிட்டுவிட்டார்,  பிறகு நமக்கு மட்டும் என்ன  வந்தது? என்ற எண்ணம் தான் தோன்றியது முதலில். திருமாவளன் செய்ததில் எந்த நியாயமும் இல்லை என்பதுவும் உண்மை. ஆனால் தமிழ் உணர்வு என்பதே ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையாகவும், அவர்கள்தான் வீறுகொண்டு போராடவேண்டும் என்பது கொஞ்சம் அதீத எதிபார்ப்புதான். அதில் நியாயமும் இல்லை

வயிறு நிறைந்து, பொருளாதார ,சமூக அந்தஸ்து கிடைத்த பிறகுதான் இந்த "மொழி, மதம், நம்முடையது, நம் பண்பாடு, கலாசாரம் " போன்ற எண்ணங்கள் எல்லாம் வீறுகொண்டு எழும். இவை எல்லாம் நம்மால் மறுக்கப்படும் நிலையில் உள்ள ஒரு சமூகத்திடம் "தமிழுக்காக போராடு, உயிர் துற" என்பது எல்லாம்  சுத்த கயவாளித்தனம்
.
நமக்கு எல்லாம் பொருளாதார வெற்றி மட்டும் கண்டுவிட்டால் போதுமானது. மற்றவை எல்லாம் தானாக கிடைக்கும். ஆனால் தாழ்தப்படவர்களுக்கோ பொருளாதார வெற்றி பெற்றுவிட்டாலும் சமூக அந்தஸ்து என்பது கிடைக்காது. தேவர் , வன்னியர் சாதிகளில் ஏதோ ஒரு  பொறிக்கி, ரௌடியிடம் இருக்கும் அந்த சமூக அந்தஸ்து, படித்து கலெக்டர் ஆகிவிட்ட ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு கிடைப்பதில்லை.

ஈழ போராட்டத்தின் காரணத்தையும் , சிங்கள இனவெறி ஆட்சியையும் கேட்டால் நமக்கு கொதிக்கிறது. துரோகிகளை கண்டால் எரிகிறது. ஆனால் நாம் நம்மை ஒரே ஒரு தினம் பறையனாக நினைத்துகொண்டு தமிழ்நாட்டில்  வாழ்ந்தோமேயானால் நமக்கு பல உண்மைகள் புரிய வரும். உலகிலேயே இனவெறி கொண்ட ஒரே மக்கள் நாம்தான்.south africa வின் apartheid ஐ    எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் நம் சாதி கட்டமைப்பு .

நமக்கு சிங்களவனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? அவன் நம்மை விட நல்லவன். ஒரே ஒருநாள் நான் என்னை பறையனாக கற்பனை செய்து கொண்டேன். என் வாழ்கை எப்படி இருக்கும். இதே ஈழப்பிரசினையில் இப்போது வரும் கோவம் வருமா? முத்துகுமார் கடிதத்தை படித்துவிட்டு கொட்டி கொண்டே இருந்தே என் கண்ணீர் , நான் பறையனாக் இருக்கும் போது வருமா? முத்துக்குமாரை விட 1000 மடங்கு உணர்சிகளை கொட்டி நான் எழுதுவேன் இந்த சாதி ஹிந்துக்கள் அடிக்கும் கொட்டத்தை.
நான் ஒரு பறையன் ஒரு கிராமத்தில் இருக்கிறேன். என்னிடம் வந்து சொல்லுங்கள் உங்கள் ஈழப்பிரச்சினையின் மூலகாரணத்தை.

தமிழ் உணர்வாளன்  :"அங்கே தமிழனுக்கு சம உரிமை கிடையாது" 
நான்: எனக்கும் தமிழகத்தில் அப்படிதான்.
தமிழ் உணர்வாளன்: தமிழ் மொழியை அங்கீகரிக்காமல் , சிங்களமே பிரதான மொழியாம் என்ன கொடுமை நாம்தானே பூர்வகுடி அங்கே, சிங்களவன் வந்தேறிதானே"
நான்: மொழியெல்லாம் ஒரு பிரச்சினையல்ல, வாழ்க்கைதான் முக்கியம், சுயகவ்ரவம்  வேண்டும் , சமூக அங்கீகாரம் வேண்டும், விரும்பும் பெண்ணை மனம் முடிக்கசமூக அனுமதி வேண்டும் , நானும் பூர்வகுடிதான் அய்யா தமிழகத்தில்.
 தமிழ் உணர்வாளன்: பெண்கள் கற்பழிக்கப்பட்டது தெரியுமா? திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டது தெரியுமா?
நான்: இதுபோல் இங்கேயும் எங்கள் பெண்கள் கற்பழிக்க பட்ட  கதைகள் 1000 உண்டு . இங்கேயும் இறந்திருக்கிறார்கள்  உண்ணா விரதமிருந்து அல்ல, உண்ண உணவில்லாமல் . உழைத்த கூலியை கேட்டதிர்க்கே இவையெல்லாம் நடந்திருக்கிறது.
 தமிழ் உணர்வாளன்: முள்ளிவாய்க்கால் கொடுரம் தெரியுமா உனக்கு? நீ பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டாய். உன் அக்கா, தங்கைக்கு  இவையெல்லாம் ஏற்பட்டிருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டாய்.
நான்: ஆயுதம் கொண்டு போராடியவன் அங்கு செத்தான் , கூலியை உயர்த்தி கேட்டதிற்கே  இங்கே நிராயுதபாணியான  எம் மக்களை கொளுத்தி இருக்கிறார்கள் உயிரோடு வைத்து . என் அக்கா தங்கைகாக நீங்கள் எத்தனை பேர் வீதியில் இறங்கினீர்?
தமிழ் உணர்வாளன்: அங்கே தமிழன் தேர்தலில் ஜெயித்தாலும் அதிபர் ஆக முடியாது, சிங்களவன் மட்டும்தான் ஆக முடியும்.
நான் : இங்கே நாங்கள் தேர்தலில் நிக்க கூட முடியாது, நின்று ஜெயித்தாலும் ஆள முடியாது தெரியுமா உனக்கு ?
தமிழ் உணர்வாளன்:  நீ என்ன சிங்கள கைகூலியா? அவனுக்கு ஆதரவாக பேசுகிறாய். புல்லுருவியே ! நீ தமிழ் இனத்தின் சாபக்கேடு. போராட வரப்போகிறாயா  ? இல்லையா  ?
நான் : எங்களுக்கு வாழ்கையே சாபக்கேடு. நான் எதற்கு போராட வேண்டும். போராடி உயிர்துறந்தால் உங்களை புதைக்கும் சுடுகாட்டிலாவது எனக்கு இடம் கிடைக்குமா? இல்லையே.இனத்திற்காக உயிர் துறந்தவன் என்பதால்  என் பெண்ணை உன் மகனுக்கு கட்டி கொடுப்பாயா? இல்லையே.. சமூக நீதி  என்று செங்கொடியை சேரியில் நட்டவன் எத்தனை பேர்? அதில் சேரியில் பெண் கொடுத்தவன் எத்தனை பேர்? கருப்பு சிகப்பு நிறத்தில் சேரியில் கொடியை  நட்டவன், எங்கள் சாதி வோட்டு எண்ணிக்கையை பார்த்தானே  ஒழிய, எங்கள் நிலையை எண்ணி பார்த்தானா? பிறகு அதில் வெள்ளை சேர்ந்து ஒரு கொடி, ஆயிரம் நிறங்களில் கொடிகள் சேரியில் பறக்கும். அதில் ஒரு கொடி கூட எங்களை தொப்புள் கொடி உறவாய் நினைக்கவில்லை.
===========
நான் இப்படிதான் பேசி இருப்பேன். ஈழப்பிரச்சினையில் இதுபோல பேச எனக்கு விருப்பம் இல்லைதான். முத்துகுமார் ஆவி என்னை மன்னிக்கட்டும். ஈழ தமிழர் பிரச்சினையில் மிகுந்த ஆர்வமாய் இருந்து மனம் அதையே சிந்தித்ததின் விளைவே இப்போது இதைபோல எழுத நேரிட்டது. நாம் ஒற்றுமையாக இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமை என்பது ஏதோ திமுக, அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளின் அரசியல் ஒற்றுமை அல்ல..இது மக்களின் சாதியை ஒழித்துவிட்டு வரும்போது ஏற்படுமே ஒரு ஒற்றுமை. அந்த ஒற்றுமை. ஒரு மீனவன் நம் மச்சானாய்  இருக்கும் போது எந்த மீனவன் செத்தாலும் கொதித்து எழுமே ஒரு கோவம் கலந்த உணர்வு அதைப்போல. நமக்குள்ளே மேல்தட்டு, கீழ்தட்டு என்று பொருளாதார வேற்றுமை இருக்கலாம். ஆனால் பிறப்பின் வழி ஒரு பெரும்பான்மை சமுகத்தையே  ஒதுக்கி வைத்துவிட்டு நாம் மட்டும் போராடினால் அது ஒரு வெறும் ஆதிக்க, வர்க்க போராட்டமே அன்றி இன போராட்டமாக என்றுமே மாறாது.

இப்போதைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல, தமிழினத்திற்கே தேவை ஒரு தலைவன். வெறும் வித்தை, வித்தையாய் பேசுபவனோ, காது கிழிய கத்துபவனோ அல்ல. "ஒரு செயல் வீரன்; தொலைநோக்கு பார்வை கொண்டவன்; தான் கொண்ட கொள்கை மாறாத ஒரு போராளி தலைவன்" வேண்டும். ஜாதியை தூக்கி எறிந்துவிட்டு தாழ்தப்பட்டவனோடு சம்பந்தம் செய்ய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறோம். சாதியை பற்றி பெருமையாக பேசுபவனுக்கும், சாதிதான் தமிழினத்தின் முதல் எதிரி என்று நன்றாக தெரியும்.

வெள்ளையனுக்கு எதிராக  எல்லோரும் சேர்ந்து போராடி இருந்தால், எப்போதே  வெற்றி பெற்று இருப்போம், ஆனால் ஆதிக்க வர்க்கம் மட்டுமே போராடியதால்தான்  வெள்ளையனால் தோற்கடிக்கப்பட்டு,  கொல்லப்பட்டவர்களே நம் சரித்திர நாயகர்கள் ஆனதின் காரணம். வெள்ளையனை  வென்று தனிநாடு பெற்று, தமிழன் உலகத்தின் பார்வையில்  கூலிகள் அல்ல, ஆதிக்க இனம் என்ற நிலை வரமால் போனதின் காரணம்.

நம் சமூகத்தில் சாதி வேற்றுமை இல்லாதிருந்திருந்தால் இந்நேரம்  வெள்ளையன்  நம்மால் கொல்லப்பட்டவர்களை சரித்திர நாயகர்களாக்கி கொண்டாடி கொண்டிருப்பான். சிங்களவன் நமது ஆதிக்க வெறிக்கு எதிராக போராடி கொண்டிருந்திருப்பான். மலேசிய சிங்கப்பூரில் நம்மிடம் நீதி கேட்டு போராடி கொண்டிருந்திருப்பார்கள்.இரண்டாம் உலகப்போரில் முக்கிய சக்தியாக கூட விளங்கி இருப்போம். என்ன செய்வது.. சாதி நம்மிடம் இருந்து எடுத்தது கொஞ்சம் நஞ்சம் அல்ல..நம் எல்லோரையுடைய வாழ்கையும் தத்து எடுத்து கொண்டது சாதி .தமிழன் வாழ்க்கை தத்துவத்தையே மாற்றி விட்டது.  "முதலாளி" என்பதை விட "உழைப்பாளி" என்று  தமிழன் என்று பெருமைபட்டுகொள்ள வைத்துவிட்டது. ஆள்பவன் தமிழன் என்பதை விட "போராளி தமிழன்" என்பதே பெரும் சாதனையாக விட்டிருக்கிறது ...

சாதியை ஒழித்து விட்டு பாருங்கள்  "தமிழனுக்கு இந்திய துணை கண்டமே அடிமை". சாதியோடு வாழ்ந்தால் உலகம் முழுவதும் தமிழன் அடிமை...